Published : 07 Jul 2024 05:16 AM
Last Updated : 07 Jul 2024 05:16 AM

ஆந்திரா - தெலங்கானா பிரச்சினை குறித்து இரு மாநில முதல்வர்கள் ஆலோசனை

ஹைதராபாத் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலவும் பிரச்சினைகளைக்கு சுமுக தீர்வு காண இரு மாநில முதல்வர்களான சந்திரபாபு நாயுடுவும், ரேவந்த் ரெட்டியும் ஹைதராபாத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் உரிமை வேண்டுமென தெலங்கானா மாநிலஅரசு சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் உருவானது. மாநில பிரிவினைக்கு பின்னர் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. தற்போது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இவருக்கு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலும் இரு முறை முதல்வராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார். இவர்தெலுங்கு தேசம் கட்சியில் பணியாற்றி, அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்து, தெலங்கானாவின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆதலால், இருவரும் தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நினைத்த சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்ற தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று மாலை ஹைதராபாத்தில் பிரஜா பவனில் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

பேச்சுவார்த்தை நடத்த வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இருமாநில முதல்வர்கள், இருமாநிலத்தை சேர்ந்த தலா 3 அமைச்சர்கள் வீதம் 6 அமைச்சர்கள், இருமாநில தலைமை செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, நிலுவையில் உள்ள10 அம்ச திட்டங்கள் குறித்து இருமாநிலங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள அரசு கட்டிடங்கள், நிலங்கள் குறித்த சொத்து பிரச்சினை, துறை ரீதியான பிரச்சினைகள், ஆந்திர மாநில பைனான்ஸ் கார்ப்பரேஷன் குறித்த நடவடிக்கை, நிலுவையில் உள்ள மின்சார கட்டணபில்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வெளிநாட்டு நிதியின் கீழ் இரு மாநிலங்களிலும் 15 அணைகள்கட்டப்பட்டன. இவற்றின் கடன் பங்கீடு, கூட்டு துறைகளின் செலவு, ஹைதராபாத்தில் உள்ள 3 முக்கிய கட்டிடங்களை ஆந்திராவிற்கு வழங்குவது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழுவில் அங்கம் வகிப்பது, அங்குள்ள அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் ஆந்திர அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களை போல் தரிசனத்தில் உரிமை வழங்குவது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது, கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு பிரச்சினை என 10 அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து இரு மாநிலங்களுக்கும் ஏற்பட்ட உடன்பாடு குறித்து மத்திய அரசிடம் பேசி அமல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x