Published : 07 Jul 2024 04:32 AM
Last Updated : 07 Jul 2024 04:32 AM

மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல்: வருமான வரிச் சலுகை எதிர்பார்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 23-ம் தேதி 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. 24, 25-ம் தேதிகளில் மக்களவை எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பட்ஜெட்டில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அசாமில் ரூ.27 ஆயிரம் கோடியில் செமி கண்டக்டர் தொழிற்சாலை, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நாரி சக்தி விதான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. 23-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்துபட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த பட்ஜெட் தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும்.

3-வது முறையாக பிரதமர் மோடிதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு மத்திய அரசுஅளித்துள்ள பரிந்துரையின் பேரில் கூட்டத்தை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுமதி வழங்கிஉள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்: மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக பதவிஏற்றுள்ளார். மேலும் இவர் இதுவரை தொடர்ச்சியாக 6 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார். வரும் பட்ஜெட்டை தாக்கல் செய்தால் தொடர்ந்து 7 முறை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெறுவார்.

இதற்கு முன்பு நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட்டை தாக்கல்செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, “வரும் பட்ஜெட் மத்திய அரசின் பொருளாதார முன்னுரிமைகள், நிதி உத்திகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டுக்கான செலவுத் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பட்ஜெட்டில் முக்கியமான சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இடம்பெறும்” என்றார்.

எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசின் பட்ஜெட்டில்வருமான வரி செலுத்துவோருக்காக சில முக்கிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் ஊகங்களும் உருவாகியுள்ளன. முக்கியமாக, வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மத்திய பட்ஜெட்டில் ஊரக வீட்டு வசதி திட்டத்தில் மாநிலஅரசுக்கான மானியங்களை அதிகரிக்க மத்திய அரசு தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த மக்களவையின் காலம் மே மாதத்துடன் முடிவடைய இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x