Published : 06 Jul 2024 11:20 PM
Last Updated : 06 Jul 2024 11:20 PM

“போலே பாபா தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்” - ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

ஆச்சாரிய சத்யேந்திர தாஸ்

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்தது.

“ஹாத்ரஸில் சத்சங்கம் நடத்தியவர் ‘போலே பாபா’ அல்லது சூரஜ் பால் என அறியப்படும் பிரபலமாக உள்ளார். கடந்த ஜூலை 2-ம் தேதி அன்று அங்கு நடந்த துயர சம்பவத்தை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இப்போது அந்த சம்பவம் தனக்கு வருத்தம் அளிப்பதாக தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பு அவர் தான். அவர் அரசிடம் இதனை தெரிவித்தாக வேண்டும். அதோடு தனது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதியானால் சிறையில் அடைக்கப்படுவார்” என சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 121 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் நபர் தேவ்பிரகாஷ் மதுக்கர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை அன்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். அதேபோல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x