Published : 06 Jul 2024 05:29 AM
Last Updated : 06 Jul 2024 05:29 AM

இளநிலை மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

புதுடெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல் ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

தேர்வு எழுத தாமதமான 1,563 மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. 1,563 பேரில் 813 பேர் மீண்டும் தேர்வு எழுதினர். அவர்களுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேநேரம் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 56 மாணவ, மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. வரும் 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கு முன்பாக மத்திய கல்வித் துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நீட் நுழைவுத் தேர்வில் பெரியஅளவில் முறைகேடுகள் நடைபெறவில்லை. சில மாநிலங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் நேர்மை, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க அண்மையில் கடுமையான சட்டம் அமல் செய்யப்பட்டு உள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்தால்லட்சக்கணக்கான மாணவர்கள்பாதிக்கப்படுவார்கள். எனவே மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்துசெய்யக் கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x