Published : 05 Jul 2024 05:16 PM
Last Updated : 05 Jul 2024 05:16 PM

பரோலில் வந்த அம்ரித் பால் சிங், பொறியாளர் ரஷீத் மக்களவை எம்.பி.க்களாக பதவியேற்பு

புதுடெல்லி: மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க பரோல் வழங்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அம்ரித் பால் சிங் மற்றும் ஷேக் அப்துல் ரஷீத் வெள்ளிக்கிழமை மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் பதவியேற்பதை முன்னிட்டு நாடாளுமன்றம், அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பொறியாளர் ரஷீத் என அறியப்படும் ஷேக் அப்துல் ரஷீத், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்ரித் பால் சிங், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர், சபாநாயகர் அறையில் இருவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

நடந்து முடிந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்ரித் பால் சிங் (31) பஞ்சாப்பின் கதூர் சாகிப் தொகுதியிலும், ஷேக் அப்துல் ரஷீத் (56) ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிறையில் இருந்த காரணத்தால் அவர்களால் மற்ற எம்.பி.கள் பதவி ஏற்றுக்கொண்ட ஜூன் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பதவி ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் பதவி ஏற்றுக்கொள்ள அவர்கள் இருவருக்கும் பரோல் வழங்கப்பட்டது. ரஷீதுக்கு திஹார் சிறையில் இருந்து நாடாளுமன்றம் வந்து செல்வதற்கான பயண நேரம் போக இரண்டு மணி நேரம் காவல் பரோலும், அசாமில் இருந்து டெல்லி வந்து செல்வதை கருத்தில் கொண்டு அம்ரித் பால் சிங்-க்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு காவல் பரோலும் வழங்கப்பட்டிருந்தது.

இவர்கள் இருவர்களது பரோல் உத்தரவில், "தற்காலிக பரோலில் வெளியில் இருக்கும்போது அவர்கள் இருவரும் எந்த ஒரு விஷயம் குறித்து ஊடகங்களில் பேசுவதோ பேட்டியளிப்பதோ, அறிக்கை வெளியிடுவதோ கூடாது. அவர்களின் குடும்பத்தினரும் எந்த ஓர் ஊடகத்திலும் பேட்டியளிக்கக் கூடாது. பரோல் காலத்தில் அம்ரித் பால் மற்றும் ரஷீத் இருவரும் பாதுகாவலர்களுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித் பால் சிங், டெல்லியில் தனது குடும்பத்தினரைச் சந்திக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்ரித் பாலின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்கு மட்டும் அவரது குடும்பத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x