Published : 04 Jul 2024 06:01 PM
Last Updated : 04 Jul 2024 06:01 PM

ஹாத்ரஸ் சம்பவத்தில் 6 பேர் கைது; போலே பாபா பின்னணியையும் விசாரிப்பதாக உ.பி போலீஸ் தகவல்

அலிகர் ரேஞ்ச் ஐஜி ஷலப் மாத்தூர்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலிகர் ரேஞ்ச் ஐஜி ஷலப் மாத்தூர், “ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். இவர்கள், அந்த ஆசிரமத்தின் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியவர்கள். இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தும் பணியை தன்னார்வ தொண்டர்கள்தான் மேற்கொண்டுள்ளனர். காவல் துறையின் உதவியை அவர்கள் வேண்டாம் என்று கூறி இருந்தனர்.

கூட்டம் அதிகமாகும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இவர்களுக்கு எந்த அனுபவமும் இல்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து இவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகர் என்பவரை தேடி வருகிறோம். அவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். இந்த சம்பவம் சதி காரணமாக நடந்ததா என்பது குறித்தும் நாங்கள் விசாரிப்போம்.

சத்சங்கம் முடிந்த பிறகு கூட்டத்தைக் கையாண்ட தன்னார்வலர்கள் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான கூட்டம், போதிய அளவு வெளியேறும் பாதைகள் இல்லாதது, மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்கள் அதிக உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம். இந்த கூட்டத்துக்கு 80,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நிகழ்வில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆதாரங்களை மறைத்துள்ளனர். சத்சங்கத்தை நடத்திய சாமியார் போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், நிகழ்ச்சிக்கான அனுமதி அவர் பெயரில் கோரப்படவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் போலே பாபா விசாரிக்கப்படுவார். அனைத்துமே விசாரணையின் போக்கைப் பொறுத்தது. போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 121 பேர் உயிரிழந்தனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x