Published : 04 Aug 2014 01:36 PM
Last Updated : 04 Aug 2014 01:36 PM
நியூயார்க் டைம்ஸின் தகவலின்படியும், இந்த உலகத்தில் இதுவரையிலான கணக்கெடுப்பின்படியும், உலகிலேயே மிக வயதான பெண்மணி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மென்ட். இவர் தனது 122-வது வயதில் 1997-ஆம் ஆண்டு காலமானார். அதே சமயத்தில், ஈக்வேடர் டைம்ஸின் தகவலின்படி, உலகில் உயிருடன் இருக்கும் மிக வயதான பெண்மணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிசோ ஒகாவா. இவர் இந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி தனது 116-வது பிறந்ததாளைக் கொண்டாடியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் சஞ்சய் அகர்வால் என்பவருக்கு, சத்தீஸ்கரின் தொழிலாளர் நலத் துறை அளித்திருக்கும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் நம்மை ஆழ்ந்துவிடும்.
அத்துறையினர் அளித்துள்ள சில 'அதிசயக்க' வைக்கும் தகவல்கள் இவைதான் : கடந்த ஆண்டு, அந்த மாநிலத்தின் சைக்கிள் விநியோக திட்டத்தின்படி, ராய்பூரில் வசிக்கும் பூஷ்பா சஹு என்பவருக்கு 732 வயது என்றும், அவர்தான் உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இத்திட்டத்தின்படி, சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் குறித்து சஞ்சய் அகர்வாலுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ராய்பூர் மாவட்டத்தில், 100 முதல் 732 வரையிலான வயதுடைய 7000 பெண்மணிகள், அம்மாநில அரசின் பெண்கள் நலத் திட்டத்தின் மூலம் பயனடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு, வகைப்படுத்தப்படாத துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக சத்தீஸ்கர் மாநில அரசு, முதலமைச்சர் தையல் இயந்திரத் திட்டத்தையும் (Mukhyamantri Silai (sewing) Machine Yojana), முதலமைச்சர் சைக்கிள் உதவி திட்டத்தையும் (Mukhyamantri Cycle Sahayata Yojana) அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், அங்குள்ள பெண் தொழிலாளர்களுக்குச் சைக்கிளும், தையல் இயந்திரமும் வழங்கத் தொடங்கியது.
சத்தீஸ்கர் தொழிலாளர் நலத் துறையின் தகவலின்படி, 532 வயதான பெண்மணி உஷா ஜம்காடே உட்பட்ட 100 வயதுக்கு மேலான 6231 பேருக்கு தையல் இயந்திரமும், 1368 பேருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 'அசாதாரணமான சம்பவம்' குறித்து ராய்பூரின் தொழிலாளர் ஆணையர் ஜிதின் குமார் கூறுகையில், "இது மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடந்தது. நாங்கள் தரவு பதிவு சேவைகளை வெளியில் கொடுத்துச் செய்கிறோம். இதனால், ஒருவருக்கு மட்டும் இதுபோன்ற தவறான தகவல் சென்றிருக்க வாய்ப்புள்ளது", என்று தெரிவிக்கிறார்.
ஆயினும், இதுகுறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் த்ரிவேதி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழில்: ஷோபனா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT