Published : 04 Jul 2024 11:36 AM
Last Updated : 04 Jul 2024 11:36 AM

அசாம், மணிப்பூரில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 48 பேர் பலி - மத்திய அரசு உதவிக்கரம்

அசாம் வெள்ளம்

புதுடெல்லி: தொடர் கனமழை காரணமாக அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 48 வெள்ளம் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, அசாமில் 46 இறப்புகளும், மணிப்பூரில் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அசாமில் புதன்கிழமை வெள்ள நீரில் மூழ்கி 8 பேரும், மணிப்பூரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இரண்டாவது அலை வெள்ளத்தால் 29 மாவட்டங்களில் 16.25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அசாமின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இதற்கிடையில், மணிப்பூரில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெள்ளப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மணிப்பூரில் உள்ள முக்கிய ஆறுகளான இம்பால், தௌபால், இரில் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள் நேற்றைய நிலவரப்படி அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன. டெல்லிக்கு புதன்கிழமையன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில், மணிப்பூர், அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் வெள்ளப் பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான சாலைகள், பாலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்மட்டம் இந்த வாரம் அபாய அளவை தாண்டியதால் அருகில் உள்ள பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், அருணாச்சல மாநிலத்துக்கு ஜூலை 5 முதல் 7 வரை மிக கனமழைகான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 3 முதல் 7 வரை குஜராத், ஹரியானா, பஞ்சாப், உ.பி.யில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், மாநில அதிகாரிகள், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், அம்மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அசாம் மற்றும் மணிப்பூருக்கு அதிக மனிதவளம், படகுகள் மற்றும் உயிர்காக்கும் பொருட்களை வழங்குவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x