Published : 04 Jul 2024 04:20 AM
Last Updated : 04 Jul 2024 04:20 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் துறை இயக்குநர் அதுல் கோயல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜிகா வைரஸ் கர்ப்பிணியை பாதித்தால், வயிற்றில் இருக்கும் சிசுவும் பாதிக்கப்படும் என்பதால் மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அல்லது அதற்கு அருகில் உள்ள இடங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸுக்கான பரிசோதனை செய்ய வேண்டும், இதில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு கரு வளர்ச்சியை கண்காணிக்கவும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் ஏடிஸ் கொசுக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, இதற்கென தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 அல்லது 7-வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதற்கு இதுவரை எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. “அதிக ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். கொசுக்கடியை தவிர்ப்பதன் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment