Published : 03 Jul 2024 07:06 PM
Last Updated : 03 Jul 2024 07:06 PM

‘புதிய மொந்தையில் பழைய கள்’ - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் | கோப்புப் படம்

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போன்றது என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், "மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, "புதிய மொந்தையில் பழைய கள்" என்று குறிப்பிடலாம். பெயரில் மாற்றம் உள்ளது. ஆனால். அடிப்படையில் பெரிய மாற்றங்கள் இல்லை. சட்டத்தை நுணுக்கமாகப் படிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், எனது ஆரம்ப பார்வையில், இந்த புதிய சட்டங்களில் மாற்றங்களும் சேர்த்தல்களும் மிகையாக உள்ளன.

இப்போது பிஎஸ்ஏ என அழைக்கப்படும் இந்திய சாட்சியச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களின் கீழ், வழக்கு விசாரணைகளில் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க நீதிமன்றங்கள் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். குற்றவியல் வழக்குகளில் விசாரணை முடிந்து 45 நாட்களுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

விசாரணையின் முதல் 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் கட்டமைக்கப்பட வேண்டும். இத்தகைய கடுமையான காலக்கெடுவை நீதிமன்றங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி உள்ளது. தீர்ப்பு என்பது நீதிபதிகள் கையில் மட்டும் இல்லை. காலக்கெடுவை சந்திக்க மிகவும் திறமையான மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை. அத்தகையவர்கள் நம்மிடம் இருக்கிறார்களா?" என்று தெரிவித்துள்ளார்.

தேசிய நீதித்துறை தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 3.4 கோடி குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குளால் நீதிமன்றங்கள் ஏற்கெனவே திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள ஜூலை 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வழக்குகளை நீதிமன்றங்கள் கையாள வேண்டும். குற்றம் நிகழ்ந்த தேதி ஜூலை 1-க்கு முன் என்றால் பழைய சட்டங்களின்படியும், ஜூலை 1-க்குப் பிறகு என்றால் புதிய சட்டங்களின்படியும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

நமது நீதித் துறையில் இன்னமும் 80 சதவீதம் அளவுக்கு டிஜிட்டல் மயமாகாத நிலையில், புதிய சட்டங்கள் மிகப் பெரிய சவால்களை நீதித்துறைக்கு ஏற்படுத்தி இருப்பதாகவே வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x