Published : 03 Jul 2024 12:42 PM
Last Updated : 03 Jul 2024 12:42 PM
புதுடெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 103% செயல்திறனை பதிவு செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் நேற்று (ஜூலை 2) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் செயல்திறன் 103 சதவீதமாக பதிவாகி இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கூட்டத்தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் அவர் விளக்கி உள்ளார். “18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 7 அமர்வுகள் நடைபெற்றன. சுமார் 34 மணி நேரம் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. முதல் நாள் அன்று, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜூன் 25ம் தேதியும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 539 உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வானார். மீண்டும் சபநாயாகராக தேர்வு பெற்ற ஓம் பிர்லா அவைக்கு நன்றி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்கள் குழுவை சபையில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார்.
ஜூன் 27ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில், 68 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 18 மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நீடித்தது. 50 உறுப்பினர்கள் தங்கள் உரையை ஆற்றினர். ஜூலை 2ம் தேதி பிரதமரின் பதில் உரையுடன் விவாதம் முடிவடைந்தது.
விதி 377ன் கீழ் மொத்தம் 41 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 73A வழிகாட்டுதலின் கீழ் 3 அறிக்கைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. இது தவிர, அமர்வின் போது 338 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன” என ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT