Published : 03 Jul 2024 12:08 PM
Last Updated : 03 Jul 2024 12:08 PM
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நேற்று ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தினார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) காலை அவை கூடியதும் இரங்கல் குறிப்பை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாசித்தார். அதில் அவர், “உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாநட்டத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அறிய மாநில அரசு விசாரணைக் குழு நியமித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களுக்கு இதயப்பூர்வ இரங்கலை இந்த அவை தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறது. இறந்தவர்களுக்காக ஒரு நிமிடம் எழுந்து நின்று நாம் அனைவரும் அஞ்சலி செலுத்துவோம்” என தெரிவித்தார். இதையடுத்து, அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT