Published : 03 Jul 2024 05:15 AM
Last Updated : 03 Jul 2024 05:15 AM

உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு: பலர் கவலைக்கிடம்

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் மத வழிபாட்டு கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 122 பேர் உயிரிழந்தனர். ஹாத்ரஸ் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை பார்த்து கதறி அழும் உறவினர்கள் .

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்தில் வரும் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல்போடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. தவிர, அதிக அளவில் அனல் காற்றும் வீசியுள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற்ற பந்தலில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற தொடங்கினர். அப்போது, திடீரென நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ஓடியுள்ளனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மேலும் சிலர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை பார்க்காமல் பலரும் அவர்கள் மீது ஏறி ஓடியுள்ளனர். இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி200-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். சம்பவம் அறிந்ததும் போலீஸார், தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அங்குமயங்கி கிடந்தவர்களை மீட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் 90 பெண்கள்உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களது சடலங்கள் ஹாத்ரஸ் மாவட்ட அரசு மருத்துவமனை, அலிகர் அரசு மருத்துவமனை, இடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமைகவலைக்கிடமாக இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி (அலிகர் மாவட்டம்) ஷாலப் மாத்தூர் கூறியதாவது:

போலே பாபா என்ற சாமியார் இங்கு பிரசங்கம் செய்ய அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து, ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள இடா பகுதியில் தற்காலிக அனுமதி வழங்கியிருந்தோம்.

அதிக வெப்பத்தால்.. பிரசங்கம் நடைபெற்ற பந்தல் அமைந்திருந்த பகுதியில் அதிக வெப்பம் நிலவியது. போதுமான காற்றும் வரவில்லை. இதனால் பந்தலில் அமர்ந்திருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பலர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அப்படி வெளியேறும்போதுதான் நெரிசல் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஹாத்ரஸ் பகுதியை சேர்ந்த ஒருசிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நெரிசலில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்த ஒருவர் கூறும்போது, ‘‘சாமியார் நடத்திய பிரசங்கத்தை கேட்க ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். உள்ளே செல்லவும், வெளியேறவும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அந்த வழியாகத்தான் எல்லோரும் ஓடி வந்தனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நான் பைக் நிறுத்தி இருந்த வழியாக தப்பி ஓடி வந்தேன். பலர் மயங்கி விழுந்தனர். சிலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்" என்றார்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நிவாரணம் அறிவிப்பு: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x