Last Updated : 02 Jul, 2024 09:51 PM

 

Published : 02 Jul 2024 09:51 PM
Last Updated : 02 Jul 2024 09:51 PM

அன்று காவலர், இன்று ஆன்மிக குரு... - பக்தர்களைக் குவித்த ‘போலே பாபா’ யார்? | உ.பி நெரிசல் சம்பவம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்தரஸின் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு காரணமான ‘போலே பாபா’ என்று அழைக்கப்படும் ஆன்மிக குரு, 18 வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேச காவல் துறையின் கான்ஸ்டபிளாக இருந்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்ட இவரது பின்னணி இது...

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள காஸ்கன்சின் பட்டியாலி கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ் பால். காவல் துறையில் சாதாரணக் கான்ஸ்டபிளாக இருந்தவருக்கு ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் வளர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு வகை துறவிகளை பார்த்தவருக்கு, தானும் அதுபோல் மாற வேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது. ஆனால், அவர்கள் போல் காவி நிற உடைகள் அணியாமல், சாதாரண மனிதராக இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேச காவல் துறையின் உளவுத் துறையில் பணியாற்றிவர். அதை உதறி தள்ளிவிட முடிவு செய்துள்ளார். கான்ஸ்டபிள் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற சூரஜ் பால், வேலையில் இருந்த போதே சிறிய ஆன்மிகப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இதற்கு கிராமப்புறங்களில் கிடைத்த வரவேற்பு அவரை உற்சாகப்படுத்தி உள்ளது.

பணி ஓய்வுக்குப் பின் தனது சொந்த கிராமமான பட்டியாலியில் தனது முதல் ஆசிரமத்தை அமைத்துள்ளார். இவரை கிராமவாசிகள் ‘போலே பாபா’ (அப்பாவி ஆன்மிகவாதி)’ என்றழைக்கத் துவங்கி உள்ளனர். இந்த பெயர் பிறகு அவருக்கு சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என மாறி விட்டது. போலே பாபாவுக்கு குழந்தைகள் இல்லை. இவரது மனைவியும் மாதாஸ்ரீ எனும் பெயரில் பாபாவுடன் மேடைகளில் அமர்ந்து பிரச்சாரங்கள் செய்து வந்துள்ளார். தமக்கு கிடைத்த அதீத ஆதரவில் மேலும் பல ஆசிரமங்களை அமைத்துள்ளார் போலே பாபா. அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் போலே பாபாவின் ஆசிரமக் கிளைகள் பெருகியுள்ளன.

இதுவரை 10 லட்சத்தைத் தாண்டும் எண்ணிக்கையில் போலே பாபாவின் பக்தர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தனது கூட்டங்களை போலே பாபா அந்தந்த பகுதியிலுள்ள சீடர்கள் மூலம் நடத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், தனக்கு கிடைக்கும் நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்களை பிரச்சாரக் கூட்டங்களில் பக்தர்களுக்கே வாரி வழங்கி விடுவதும் இந்த பாபாவின் பாணியாக உள்ளது. இதுவே, பாபாவின் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாகி உள்ளது. இவரது கூட்டங்களில் வழக்கமாக பிரச்சனைகள் வருவதில்லை எனக் கருதப்படுகிறது.

வழக்கமாக, போலே பாபாவின் கூட்டங்களுக்கு வருபவர்கள் கிராமவாசிகளும், ஏழைகளும் என்பதால் அதிக பிரச்சினைகள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூட்டங்கள் நடத்தும் பகுதிகளில் பாதுகாப்பு போலீஸாரும் அதிகம் காணப்படாத நிலை இருந்துள்ளது. கரோனா சமயங்களில் மட்டும் போலே பாபாவின் கூட்டங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தன. வெறும் ஐமபது பேர் மட்டும் எனக் கூறிவிட்டு ஐம்பதாயிரம் பேர்களை கூட்டியுள்ளார் போலே பாபா.

எனினும், அப்போதும் அவர் மீது பெரிய நடவடிக்கை எதுவும் இல்லாமல் போய் உள்ளது. இன்று நடைபெற்ற ஹாத்தரஸின் கூட்டத்திலும் பாதுகாப்பு போலீஸார் அதிகம் இருக்கவில்லை. காலை 9 மணிக்கு துவங்கியக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றுள்ளது. தற்போது உத்தரப் பிரதேசத்தின் கோடை வெப்பத்தில் வந்த மழையின் காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருந்துள்ளது.

இச்சூழலில், கூட்டத்தினர் வெளியேற போதுமான வாசல் வசதி செய்யப்படவில்லை. இதில், ஒருவர் தடுக்கி விழ அவர் மீது அடுத்தடுத்து பலரும் விழுந்துள்ளனர். இது தெரியாமல் ஏற்பட்ட நெரிசல் அதிகரித்து பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஆன்மிகக் கூட்ட அமைப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மீதும் நடைபெறும் விசாரணையில் விரைவில் கைதுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x