Published : 02 Jul 2024 05:10 PM
Last Updated : 02 Jul 2024 05:10 PM

நீட் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வழிவகுப்பீர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

ராகுல் காந்தி | கோப்புப் படம்

புதுடெல்லி: நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடித விவரம்: "இந்தக் கடிதம் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஜூன் 28-ம் தேதி எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று (திங்கள்கிழமை) கோரிக்கை விடுத்தன. இந்த விவகாரம் குறித்து அரசுடன் விவாதிப்பதாக சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்தார்.

முன்னோக்கி செல்லும் வழியைக் கண்டறிய ஆக்கபூர்வமாக ஈடுபடுவதே எங்கள் நோக்கம். இந்த நேரத்தில், எங்களின் ஒரே கவலை இந்தியா முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 24 லட்சம் நீட் தேர்வர்களின் நலன் மட்டுமே. லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளன. வினாத்தாள் கசிவு என்பது பலரின் வாழ்நாள் கனவுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும், அவர்களின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், இந்த பிரச்சினையைத் தீர்க்க தைரியமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நீட் தேர்வு விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், அது நமது உயர் கல்வி அமைப்பில் உள்ள ஆழமான கறையை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்து, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளை ஒத்திவைப்பது, தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றுவது போன்ற அரசின் நடவடிக்கைகள், நமது ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு முகமையில் உள்ள சீர்குலைவை மறைக்கும் நடவடிக்கையாகும்.

மாணவர்கள் பதில்களைப் பெற தகுதியானவர்கள். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மீட்டெடுப்பதற்கும் நாடாளுமன்ற விவாதம் முதல் படியாகும். இந்த விவகாரத்தின் அவசரம் கருதி, நாளை (புதன்கிழமை) அவையில் விவாதம் நடத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இந்த விவாதத்தை நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று ராகுல் காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x