Published : 02 Jul 2024 01:09 PM
Last Updated : 02 Jul 2024 01:09 PM

கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ள தாய்லாந்து புறப்பட்டது இந்திய ராணுவக் குழு

தாய்லாந்து புறப்பட்டுச் சென்ற இந்திய ராணுவ வீரர்கள்

புதுடெல்லி: தாய்லாந்து நாட்டு ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் நோக்கில், இந்திய ராணுவக் குழு அந்நாட்டுக்கு புறப்பட்டது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரீயின் 13-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் நேற்று புறப்பட்டுச் சென்றனர். இந்தப் பயிற்சி ஜூலை 1 முதல் 15 வரை தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள வச்சிராபிரகான் கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு 2019 செப்டம்பர் மாதத்தில் மேகாலயாவின் உம்ரோயில் நடத்தப்பட்டது.

76 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப்பிரிவில் முக்கியமாக லடாக் சாரணர்களின் ஒரு பட்டாலியன், பிற ஆயுதங்கள் மற்றும் படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ராயல் தாய்லாந்து ராணுவப் பிரிவில் முக்கியமாக 1-வது பட்டாலியன், 4-வது படைப்பிரிவின் 14 காலாட்படை படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்கள் உள்ளனர்.

மைத்ரீ பயிற்சியின் நோக்கம் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதாகும். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், வனம் மற்றும் நகர்ப்புற சூழலில் கிளர்ச்சி, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் ஒருங்கிணைந்த திறன்களை இந்தப் பயிற்சி மேம்படுத்தும். இந்தப் பயிற்சி, உயர் அளவிலான உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு உத்திகளில் கவனம் செலுத்தும்.

கூட்டு செயல்பாட்டு மையத்தை உருவாக்குதல், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், ட்ரோன்கள் மற்றும் எதிர் ட்ரோன் அமைப்புகளை பயன்படுத்துதல், தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், சட்டவிரோத கட்டமைப்புகளை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகளில் அடங்கும்.

கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் இரு தரப்பினரும் தங்களது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள மைத்ரீ பயிற்சி உதவும். இந்தப் பயிற்சி இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே பரஸ்பர சுறுசுறுப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x