Published : 02 Jul 2024 11:15 AM
Last Updated : 02 Jul 2024 11:15 AM

அக்னி பாதை, சிறுபான்மையினர் குறித்த ராகுலின் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

ராகுல் காந்தி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திங்கட்கிழமை அன்று அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இதனால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர். அக்னிபாதை திட்டம் சார்ந்தும் தனது கருத்துகளை ராகுல் சொல்லி இருந்தார். அதோடு சிறுபான்மையினர் குறித்தும் பேசி இருந்தார். நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, அதானி மற்றும் அம்பானி குறித்தும் பேசி இருந்தார்.

இதற்கு ஆளும் பாஜக தரப்பில் இருந்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கடும் எதிர்வினை ஆற்றினர். மேலும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பு எம்.பி-க்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக ராகுல் காந்தி பேசி இருந்தார்.

அவைக் குறிப்பில் நீக்கப்பட்ட ராகுலின் கருத்துகள்: சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அநீதி செய்கிறது, தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானி குறித்த விமர்சனம், நீட் தேர்வு பணம் படைத்த மாணவர்களுக்கானதே தவிர சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கானது அல்ல, அக்னி பாதை திட்டம் பிரதமர் அலுவலகத்தின் திட்டம் போன்ற ராகுலின் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மல்லிகார்ஜுன கார்கே கருத்துகளும் நீக்கம்: இதே போல மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்த கருத்துகளும் நீக்கப்பட்டன. ‘சத்ய நாஷ்’ (அழித்தல்), ‘கமந்த்’ (ஆணவம்), ‘முஜ்ரா’ (முகலாய ஆட்சியில் பெண்களின் நடன நிகழ்ச்சி) போன்ற வார்த்தைகள் அவரது உரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார். அதுவும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x