Published : 02 Jul 2024 05:09 AM
Last Updated : 02 Jul 2024 05:09 AM

மக்களவையில் ராகுல் கடும் வாக்குவாதம்: சர்ச்சையான பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா கண்டனம்

மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.படங்கள்: பிடிஐ

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், பாஜக தலைவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுலின் சர்ச்சைபேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். அவையில் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

மக்களவை நேற்று காலை கூடியதும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்குமக்களவை தலைவர் ஓம் பிர்லாவாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தொடங்கி வைத்தார்.

அப்போது, நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “நீட் விவகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதம் நடத்த வேண்டும். நீட் தேர்வு மட்டுமின்றி, கடந்த 7 ஆண்டுகளில் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு 70 முறை நடந்துள்ளது. இதில் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து, “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதானவிவாதத்தின்போது வேறு எந்தபிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை” என்றார்.

அதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், ‘‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதானவிவாதத்துக்கு பிறகு இந்த பிரச்சினையை அவையில் விவாதிக்கலாம் என அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

‘‘நீட் தொடர்பான விவாதத்துக்கு உறுப்பினர்கள் தனியாக நோட்டீஸ் அளிக்கலாம்’’ என்று மக்களவை தலைவர் கூறினார். நீட் விவகாரத்தில் தனி விவாதம் நடத்துவதற்கு அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெளிநடப்பு செய்த அவர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை மீண்டும் கூடியதும் சிவபெருமான் படத்தை அவையில் காண்பித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘அபய முத்திரை காங்கிரஸின் சின்னம். இது அச்சமின்மையை குறிக்கிறது. அஹிம்சை, அச்சமின்மை குறித்து நமது மகான்கள் போதித்துள்ளனர். இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்’’ என்றார்.

அவரது இந்த சர்ச்சை கருத்து, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே வார்த்தைப் போரை தொடங்கி வைத்தது. ராகுல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ஒட்டுமொத்த இந்து சமூகத்தினரையும் வன்முறையாளர்கள் என்று கூறுவது மிகவும் தீவிரமான பிரச்சினை” என்றார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, “இந்து என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என ராகுல் கூறுகிறார். வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மக்களவை தலைவர் கூறும்போது, “எந்த ஒரு மதம் குறித்தும் ஆட்சேபமான கருத்துகளை நீங்கள்(ராகுல் காந்தி) கூறுவது அழகு அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும்" என்று கண்டித்தார். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அமளி குறைந்ததும் பேச்சை தொடர்ந்த ராகுல், “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ‘அக்னி பாதை’ திட்ட ராணுவ வீரர்கள் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும்போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலன்களும் இல்லை. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு தூக்கி எறிவது போன்று அக்னி வீரர்கள் நடத்தப்படுகின்றனர். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும், அக்னி பாதை திட்டத்தை ரத்து செய்வோம்” என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “உயிர்த் தியாகம்செய்யும் அக்னி வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது’’ என்றார்.

ஓம் பிர்லாவிடம் ராகுல் கேள்வி: ராகுல் காந்தி பேசும்போது, ‘‘மக்களவை தலைவர் இருக்கையில் நீங்கள் (ஓம் பிர்லா) அமர வைக்கப்பட்டபோது, நான் உங்களுடன் கை குலுக்கினேன். நீங்கள் நிமிர்ந்து நின்று என்னிடம் கைகுலுக்கினீர்கள். ஆனால், பிரதமர் மோடியிடம் கைகுலுக்கும்போது சிரம் தாழ்த்திவணங்கினீர்கள். அந்த இருக்கையில் மக்களவை தலைவர் மற்றும் ஓம் பிர்லா ஆகிய இருவர் அமர்ந்திருப்பதாக கருதுகிறேன்’’ என்றார்.

இதற்கு ஓம் பிர்லா, ‘‘பிரதமர் மோடி நாட்டின் தலைவர். பெரியவர்கள் முன்பு தலைவணங்கவும், சமமானவர்களுடன் நேராக நின்று கைகுலுக்க வும் எனக்கு கலாச்சாரம் கற்றுத் தந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x