Published : 02 Jul 2024 06:25 AM
Last Updated : 02 Jul 2024 06:25 AM

நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு: குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

கோத்ரா: நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை சிபிஐ கைது செய்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட்-யுஜி நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதற்காக நியமிக்கப்பட்ட மையங்களில் குஜராத்தில் உள்ள ஜெய் ஜலாராம் பள்ளியும் ஒன்றாகும். பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ரா அருகே அமைந்துள்ள இந்த ஜெய் ஜலாராம் பள்ளியில் மே 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது, முறைகேடுகள் நடைபெற்றது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். நீட் முறைகேடு தொடர்பாக இதுவரையில் குஜராத் போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், 6-வது நபராக தீக்சித் படேல் கைதாகியுள்ளார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராகேஷ் தாக்கூர் கூறுகையில், “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை குஜராத் அரசு சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளதால் சிபிஐ குழு தீக்சித் படேலை உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தும்’’ என்றார்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடையச் செய்வதற்காக 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் கேட்டதாக கைதான பள்ளி உரிமையாளர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் ஏற்கெனவே, வதோதராவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பரசுராம் ராய், ஜெய் ஜலாராம் பள்ளி முதல்வர் புருஷோத்தம் ஷர்மா, பள்ளி ஆசிரியர் துஷார் பட், இடைத்தரகர்கள் விபோர் ஆனந்த் மற்றும் ஆரிப் வோஹ்ரா ஆகிய 5 பேரை பஞ்சமால் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக மாணவர்கள் ஜெய் ஜலாராம் பள்ளியை தேர்வு மையமாக தேர்வு செய்யுமாறு வழிநடத்தப்பட்டது கைதானவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x