Published : 01 Jul 2024 07:32 PM
Last Updated : 01 Jul 2024 07:32 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசினார். பாஜக இந்துக்கள் இல்லை எனக் கூறியதால் ராகுல் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. எனினும் அவையில் பல விஷயங்களை முன்வைத்தார். சிவன், குருநானக், ஜீசஸ் போன்ற கடவுள்கள் மற்றும் அபய் முத்திரை புகைப்படங்களை காண்பித்து பேசினார் ராகுல். தொடர்ந்து சில விஷயங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக சாடும் வகையில் பேசினார். அவற்றின் தொகுப்பு:.
பிரதமர் மோடி குறித்து கிண்டல்: "சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள். கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார்" என்று ராகுல் காந்தி பேசும்போது உறுப்பினர்கள் யாரோ கேள்வி எழுப்ப, "பரமாத்மா மோடியின் ஆத்மாவுடன் நேரடியாக பேசுவார். நாம் மனிதர்கள். நாம் உயிரியல் ரீதியாக பிறந்தவர்கள். நமக்கு பிறப்பு, இறப்பு உண்டு. ஆனால் பிரதமர் மோடி தெய்வீக சக்தியால் வந்தவர்" என்று ஒருவித நக்கல் சிரிப்புடன் பேசினார் ராகுல் காந்தி.
அயோத்தி சர்வே: அயோத்தி குறித்து பேசும்போது, மக்களவை தேர்தலில் அயோத்தியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி எம்.பி அவதேஷுக்கு அவையிலேயே கைகுலுக்கி பாராட்டினார் ராகுல் காந்தி. பின்னர் பேசிய ராகுல், "ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தியில் தேர்தலில் போட்டியிட நரேந்திர மோடி இரண்டு முறை சர்வே நடத்தினார். ஆனால், "அயோத்தியில் தேர்தலில் போட்டியிடாதீர்கள், அயோத்தி மக்கள் உங்களைத் தோற்கடிப்பார்கள்" என்று கருத்துக் கணிப்பை நடத்தியவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். அதனால்தான் நரேந்திர மோடி அங்கிருந்து தப்பிச் சென்று வாரணாசியில் போட்டியிட்டார்" என்றார்.
குஜராத் தேர்தல்: குஜராத் தேர்தல் குறித்து பேசும்போது, "மோடி ஜி, தயவு செய்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... இந்த முறை குஜராத்தில் இண்டியா கூட்டணி உங்களை தோற்கடிக்கப் போகிறது" என்று சவால் விடுத்தார்.
சபாநாயகர் மீதான விமர்சனம்: சபாநாயகர் ஓம் பிர்லா குறித்து பேசிய ராகுல் காந்தி, "சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதுக்கு நானும் கை கொடுத்தேன். பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நிமிர்ந்து நின்று கை கொடுத்த நீங்கள், பிரதமர் கை கொடுக்கும்போது குனிந்து கை கொடுத்தீர்கள்" என்று சபாநாயகர் அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என விமர்சிக்கும் வகையில் பேசினார்.
இதற்கு பதில் கொடுத்த சபாநாயகர், "பெரியவர்கள் முன் பணிந்து, சமமானவர்களுடன் சரிநிகராக கைகுலுக்க எனது கலாச்சாரம் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை தான் நான் பின்பற்றினேன்" என்று விளக்கம் கொடுத்தார். பதிலடியாக, "உங்கள் வார்த்தைகளை நான் மதிக்கிறேன், ஆனால் இந்த அவையில் சபாநாயகரை விட பெரியவர்கள் யாரும் இல்லை" என்றார் ராகுல் காந்தி. இதையும் வாசிக்க > “பிரதமர், பாஜக மட்டுமே இந்துக்கள் கிடையாது” - ராகுல் காந்தி பேச்சும் மோடி, அமித் ஷா கொந்தளிப்பும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT