Published : 01 Jul 2024 04:46 PM
Last Updated : 01 Jul 2024 04:46 PM

“பிரதமர், பாஜக மட்டுமே இந்துக்கள் கிடையாது” - ராகுல் காந்தி பேச்சும் மோடி, அமித் ஷா கொந்தளிப்பும்

புதுடெல்லி: "உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது" என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியததை அடுத்து, மக்களவையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் முதல் பேச்சு கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி கடவுள் சிவன் படத்தை காட்டிப் பேசினார். அவர் பேசும்போது, “எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம்.

முதல் யோசனை... ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்த யோசனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. எனக்கு இது தெரியும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் உண்மை.

சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை.

அடுத்து மூன்றாவது யோசனை. மூன்றாவது யோசனை உண்மை, தைரியம் மற்றும் அகிம்சையில் இருந்து வெளிப்படுகிறது. இது யோசனை நீங்கள் வெறுக்கும் ஒரு சின்னமாக இருக்கலாம். அதுதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள்.

கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்திய உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவருடன் உயிருடன் இருக்கிறார்.

நான் கவனித்த இன்னொரு விஷயம், ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா? 'USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம்.

மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

பாஜகவினர் இந்துக்கள் இல்லை என்று கூறிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும்.

தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

இதனால் மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கூட்டணிக்கும் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x