Published : 07 May 2018 08:48 AM
Last Updated : 07 May 2018 08:48 AM
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு துளியும் கருணை காட்டாமல் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுப்பையா (60), கடந்த வாரம் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து, குற்றவாளியை உடனே கைது செய்யக் கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சென்று பார்த்தார். அப்போது சிறுமிக்கு தரமான சிகிச்சை அளிக்க அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த சம்பவம் மனித சமுதாயத்திற்கே பெரும் இழுக்காகும். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தப்பட்டேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு துளியும் கருணை காட்டாமல் அவர்களை தூக்கிலிட வேண்டும்.
இந்த சிறுமிக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. ஏற்கெனவே சிறுமியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு இலவச கல்வி அளிக்கப்படும். சிறுமியின் தந்தைக்கு இலவச விவசாய நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT