Published : 30 Jun 2024 04:20 PM
Last Updated : 30 Jun 2024 04:20 PM

அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் - பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: அனைவரும் தங்கள் அன்னைக்காக மரம் நட முன்வர வேண்டும் என்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமரான நரேந்திர மோடி, மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக இன்று உரையாற்றினார். அப்போது அவர், "உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள். ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்?

இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன். இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில். நானும்கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன். நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள். ஏழைகளாகட்டும், செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும், இல்லத்தரசிகளாகட்டும் அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது. அவர்கள் தங்களின் படங்களை #Plant4Mother என்பதில் தரவேற்றுவதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள்.

இந்த இயக்கத்தினால் மேலும் ஒரு ஆதாயம் உண்டு. பூமித்தாயும் நமது தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள். பூமித்தாய் தான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம். ஆகையால் பூமித்தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகிறது. அன்னையின் பெயரில் மரம் நடும் இயக்கத்தால் நமது அன்னை கவுரவப்படுத்தப்படுகிறாள் என்பதோடு, பூமித்தாயும் காக்கப்படுகிறாள். கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், இந்தியாவில் வரலாறு காணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும்.

தேசத்தின் பல்வேறு பாகங்களில் பருவமழையானது வேகமாக தனது வண்ணங்களைப் பரப்பி வருகிறது. இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை. மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன். இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது. பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு. குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரியங்கள் மற்றும் விதிகள்-பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை.

இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன. இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான். இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் தலைமையில் அட்டப்பாடியின் பழங்குடியினச் சமூகமானது, தொழில்முனைவின் அற்புதமான எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறது. இந்த அமைப்பு, மூங்கில் கைவினைப்பொருட்களுக்கான ஒரு அலகையும் நிறுவியிருக்கிறது.

இப்போது இவர்கள் ஒரு சில்லறை விற்பனை அங்காடியையும், ஒரு பாரம்பரியமான கஃபேயையும் திறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது தங்களுடைய குடைகளையும், இன்னும் பிற பொருட்களையும் விற்பனை செய்வது மட்டுமல்ல, தங்களுடைய பாரம்பரியம், தங்களுடைய கலாச்சாரம் ஆகியவற்றையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது என்பதே உள்ளார்ந்த விஷயம். இன்று கார்த்தும்பி குடைகள், கேரளத்தின் சின்ன கிராமம் தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகள் வரை தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நமது கொள்கைக்கு இதை விடச் சிறப்பான வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?

அடுத்த மாதம் இந்த நேரம் பாரீஸ் நகரத்தில் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடங்கப்பட்டிருக்கும். நீங்கள் அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், நம்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கெடுக்கவிருக்கும் இந்தியக் குழுவின் வீர்களுக்கு நான் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கின் நினைவுகள் நம்மனைவரின் நினைவுகளிலும் இன்னமும் கூட பசுமையாக இருக்கின்றது. டோக்கியோவில் நமது வீரர்களின் வெளிப்பாடு, இந்தியர்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகிலிருந்தே நமது தடகள வீரர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காகத் தங்களைத் தயார் செய்வதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களையும் கணக்கெடுத்தால், இவர்கள் அனைவரும் சுமார் 900 சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். இது கணிசமான எண்ணிக்கை.

பாரீஸ் ஒலிம்பிக்கில் சில விஷயங்களை நீங்கள் முதன்முறையாகக் காண்பீர்கள். துப்பாக்கிச் சுடும் போட்டியில் நமது விளையாட்டு வீரர்களின் திறமை வெளிவரத் தொடங்கியிருக்கிறது. டேபிள் டென்னிஸில் நமது ஆடவர் மற்றும் பெண்களின் அணிகள் தகுதி பெற்றன. இந்திய ஷாட்கன் அணியில் நமது ஷூட்டர் பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த முறை மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றத்தில் நமது அணியின் வீரர்கள், நாம் முன்பு போட்டியிடாத பிரிவுகளிலும் போட்டிபோட இருக்கிறார்கள். இந்த முறை விளையாட்டுக்களில் ஒரு அலாதியான சிலிர்ப்பை நம்மால் உணர முடியும் என்பதை நீங்களே அனுமானித்துக் கொள்ளலாம்.

சில மாதங்கள் முன்பாக, உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் நமது மிகச் சிறப்பான செயல்பாடு என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல சதுரங்கம் மற்றும் பேட்மிண்டனிலும் கூட நமது விளையாட்டு வீரர்களும் வெற்றிக் கொடி நாட்டியிருந்தார்கள். நம்முடைய விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டைப் புரிவார்கள் என்று நாடு எதிர்பார்க்கிறது. இந்தப் போட்டிகளில் பதக்கங்களையும் வெல்வார்கள், நாட்டுமக்களின் இதயங்களையும் கொள்ளை கொள்வார்கள். அடுத்து வரவிருக்கும் நாட்களில், இந்திய அணியைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைக்கவிருக்கிறது. நான் உங்களனைவரின் சார்ப்பாகவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன். இந்த முறை #Cheer4Bharat என்ற ஹேஷ்டேக் வாயிலாக நாம் நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவோம். அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து அதிகப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வேகத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்... உங்களுடைய இந்த வேகம்... இந்தியாவின் மாயாஜாலம், உலகிற்கு நம் வீரர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்த பேருதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x