Published : 30 Jun 2024 07:37 AM
Last Updated : 30 Jun 2024 07:37 AM
பாட்னா: மக்களவைத் தேர்தலில் பாஜக.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் பாஜக இணைந்து மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
அதேபோல் பிஹார் மாநிலத்திலும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நிலவுகிறது. இந்நிலையில், பிஹார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை பாஜக தலைமையில் சந்திக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே கடந்த வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை மாற்ற வேண்டும் என்றும் பாஜக.வினர் கூறினர்.
இந்நிலையில், பிஹார் மாநில இளைஞர்களுடன் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
பிஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை பாஜக நீக்கினால், மத்தியில் பாஜக கூட்டணி அரசு அதிகாரத்தில் நீடிப்பது கேள்விக் குறியாகிவிடும். அந்தளவுக்குதான் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. பாஜக விரும்பினாலும் நிதிஷ் குமாரை அந்த கட்சியால் நீக்க முடியாது. அடுத்த ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியின் (ஐக்கிய ஜனதாதளமா அல்லது பாஜக.வா?)தலைமையில் சந்திப்பது என்ற பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக.வுக்கு நிதிஷ்குமார் மிகவும் தேவையானவர்.
மேலும், நிதிஷ் குமாருக்கு பிஹார் மக்கள் உணர்வுப்பூர்வமாக ஆதரவு அளிக்கின்றனர். எனவே, மத்தியில் அதிகாரத்தில் பாஜக நீடிக்க வேண்டுமென்றால், முதல்வர் பதவியில் நிதிஷ் குமார் நீடிப்பது அவசியம். அதேநேரத்தில் நிதிஷ்குமார் தொடர்ந்தால், பிஹாரில் பாஜக.வின் செல்வாக்கு சரியும்.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே வினாத் தாள் கசிந்ததாக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்து படித்து தேர்வெழுதும் மாணவர்கள், வினாத் தாள் கசிவால் பாதிக்கப்படுகின்றனர். பிஹார் இளைஞர்கள் ஒன்றைபுரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வெறும் உரிமைகள் வேண்டுமா அல்லது வேலை வாய்ப்புவேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்? தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் பிஹார் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்தால், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு கையேந்தும் நிலைதான் ஏற்படும். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT