Published : 29 Jun 2024 02:04 PM
Last Updated : 29 Jun 2024 02:04 PM
புதுடெல்லி: பிஹார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் அஸ்வின் குமார் சவுபே தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்தால், பிஹார் மாநில அரசியலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் மீண்டும் ஆட்சி மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவை விடக் குறைந்த தொகுதிகள் பெற்ற இண்டியா கூட்டணியும் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸின் நோக்கம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அதற்கான நடவடிக்கை இல்லை எனக் கூறி விட முடியாத நிலை உள்ளது. இச்சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பிஹார் மாநிலத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அங்கு, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
நிதிஷ் தான் முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து, பாஜக அல்லது ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவில் ஒன்பது முறை முதல்வராகி உள்ளார். தற்போது பிஹாரில் அவரது பதவியை குறிவைக்கும் விதமாக மாநில பாஜகவின் மூத்த தலைவர் அஸ்வின் சவுபே கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் அஸ்வின் சவுபே கூறும்போது, “பிஹாரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நேரம் வந்து விட்டது. இதற்காக, ஜேடியு உள்ளிட்ட தன் கூட்டணிகளின் ஆதரவையும் பெற்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். பாஜக தொண்டர்கள் இதற்கான பணிகளைத் துவங்க வேண்டும். இது குறித்து நம் தேசிய தலைமை முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிஹாரின் மற்றொரு முக்கியத் தலைவரான சஞ்சய் பாஸ்வான், “பாஜகவுடன் மட்டும் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மக்களவை தேர்தலில் பூஜ்ஜியம் மட்டுமே கிடைத்திருக்கும். விரைவில், நிதிஷ்குமார் என்டிஏ-விலிருந்து வெளியேறி இண்டியா கூட்டணியில் இணையலாம்” எனக் கூறியிருந்தார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரான பாஸ்வான் கூறியதைத் போலவே லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளத்தினரும் கூறி வருகின்றனர். இதுபோன்ற சர்ச்சைக் கருத்துக்களுக்கு முதல்வர் நிதிஷ் உள்ளிட்ட அவரது கட்சியினர் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை.
எனினும், இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெறும் ஜேடியுவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இதுபற்றிய விவாதம் எழ வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வருடம் அக்டோபரில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரை பிரச்சினைகள் எழாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் ஆர்ஜேடி என அணிமாறிக் கொண்டே இருந்ததால் முதல்வர் நிதிஷுக்கு ‘பல்டிமார் (பல்டி அடிப்பவர்)’ என்ற பெயர் ஏற்பட்டு அவர் மீது அதிருப்தி நிலவி வருகிறது.
இதனால், மக்களவை தேர்தலில் நிதிஷ் கட்சிக்கு எந்த தொகுதிகளும் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எனினும், 12 எம்.பி.,க்களை ஜேடியு பெற்றுள்ளது. இதனிடையே ஜேடியு ஆதரவு இல்லை என்றாலும் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பி.,க்கள் உட்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவினால் என்டிஏ ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாது என்றே கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT