Published : 29 Jun 2024 01:35 PM
Last Updated : 29 Jun 2024 01:35 PM

ராமர் பாதையில் பள்ளங்கள் - 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்; உ.பி. அரசு உத்தரவு

அயோத்தி: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் பாதையில் பல்வேறு இடங்களில் பெரும் பள்ளங்கள் மற்றும் கசிவுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பணிகளில் அலட்சியமாக இருந்ததாக 6 அதிகாரிகளை உத்தரப் பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஆறுமாதங்கள் கடந்த நிலையில் மாநிலத்தில் பெய்த முதல் கனமழையால், கோயில் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மற்றும் ராமர் கோயிலுக்குச் செல்லக்கூடிய ராமர் பாதையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களும் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட விரைவான மறுசீரமைப்பு பணிகளின் அலட்சியம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாநிலத்தில் ஜூன் 23 மற்றும் 25 தேதிகளில் பெய்த மழையால் ராமர் பாதையில் 15 இணைசாலைகள் மற்றும் தெருக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சாலையோரத்தில் இருந்த வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. 14 கிலோ மீட்டர் நீளமுள்ள ராமர் பதையின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் விழுந்தன.

இதனால் பணிகளில் அலட்சியமாக இருந்ததாக கூறி பொதுப்பணித் துறையைச் சேர்ந்த துருவ் அகர்வால் (செயற்பொறியாளர்), அனுஜ் தேஸ்வால் (உதவி பொறியாளர்), மற்றும் பிரபாத் பாண்டே (இளநிலை பொறியாளர்), உத்தரப் பிரதேச ஜல் நிகாமைச் சேர்ந்த ஆனந்த் குமார் துபே (செயற்பொறியாளர்), ராஜேந்திர குமார் யாதவ் (உதவி பொறியாளர்) மற்றும் முகம்மது ஷாகித் (இளநிலை பொறியாளர்) ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துருவ் அகர்வால் மற்றும் அனுஜ் தேஸ்வால் ஆகியோரை சிறப்பு செயலர் வினோத் குமார் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். பிரபாத் பாண்டேவை பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் (வளர்ச்சி) வி.கே.ஸ்ரீவஸ்தவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஜல் நிகாம் துறையைச் சேர்ந்த மற்ற மூன்று பொறியாளர்கள், அதன் நிர்வாக இயக்குநர் ராகேஷ் குமார் மிஷ்ராவின் உத்தரிவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக, அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட ஒப்பந்ததாரரான புவன் இன்ஃப்ராகாம் பி. லிமிட்-க்கும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்த பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் அஜய் சவுகான், “கட்டப்பட்ட சிறிது காலத்திலேயே ராமர் பாதையின் மேலடுக்கில் சேதம் உண்டாகியிருப்பது, உத்தரப் பிரதேச மாநிலம் முன்னுரிமையின் அடிப்படையில் செய்த வேலையில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பதைக் காட்டுவதுடன், பொதுமக்கள் மத்தியில் மாநில அரசின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x