Published : 29 Jun 2024 11:21 AM
Last Updated : 29 Jun 2024 11:21 AM

டெல்லி விபத்து | 3 தொழிலாளிகள் உடல் மீட்பு; மழை தொடர்பான உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு (டிஎஸ்எஃப்) அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறும்போது, “கட்டுமானப் பணியிடத்தில் நடந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் இருவர் சந்தோஷ் குமார் யாதவர் (19) மற்றும் சந்தோஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. மூன்றாமவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இடிபாடுகளை அகற்ற கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமான குழிகளில் இருந்த மழைநீரை அகற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன

இடிபாடுகளில் இன்னும் யாரவது சிக்கியிருக்கிறார்களா என்று அறிய தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இவை தவிர, பருவ மழைத் தொடங்கி உள்ள டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஜூன் மாதத்தில் அதிக மழை பொழிந்த நிலையில் மழைத் தொடர்பான விபத்துக்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து கார் ஓட்டுநர், ரோகினி பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 39 வயது ஆண் ஒருவர், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி 3 பேர் அடங்குவர்.

டெல்லி கனமழை: கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில்228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது.88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை சாதனை அளவாகப் பார்க்கப்படுகிறது.

1936-ம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததேஇதுவரை அதிகபட்ச மழை அளவாகஉள்ளது. மழை காரணமாக டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர மண்டலப் பகுதிகள்) பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x