Published : 05 Aug 2014 08:32 AM
Last Updated : 05 Aug 2014 08:32 AM
மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி மீது பெண் நீதிபதி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா உறுதி அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்ட குற்றவியல் கூடுதல் பெண் நீதிபதியை அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வீட்டுக்கு வரவழைத்து, பாட்டுக்கு நடனம் ஆட வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. சொந்த வேலை இருப்பதாக கூறி, பெண் நீதிபதி மறுத்துள்ளார். மறுநாள் அந்த நீதிபதி, ‘உங்கள் கவர்ச்சியான நடனத்தை காண முடியாமல் போய் விட்டது,’ என்று கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, வீட்டுக்கு தனியாக வரும்படி அழைத்ததாகவும் கணவருடன் சென்றதால் பார்க்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கச் சென்றபோது, அவர் சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் நீதிபதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற மாற்றல் விதிகளுக்கு முரணாக ஆண்டின் நடுவில் மாநிலத்தின் வேறு இடத்துக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார்.
பதவி ராஜினாமா
மகளின் படிப்பு பாதிக்காமல் இருக்கவும் தாய்மை, சுயமரியாதை மற்றும் பெண்மையின் கண்ணியத்தைக் காக்கவும் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறியுள்ள அப்பெண் நீதிபதி, இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புகாரில், ‘அந்த நீதிபதி நிர்வாகப் பொறுப்பை கவனிக்கும் அதிகாரம் மிக்கவர் என்பதால் இப்படி தீய பார்வை கொண்டுள்ளார். நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிக்கே இந்த நிலை என்றால், தாய், சகோதரி, மனைவியை இப்படித்தான் நடத்துவோமா? இதுதான் நிலை என்றால், என்ன மாதிரியான அரசியல் சாசன நீதி பரிபாலனத்தை நாம் செய்து வருகிறோம்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். இப்புகார் நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துரதிர்ஷ்டவசமானது
இதுகுறித்து பதிலளித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ‘வேறு எந்தத் துறையிலும் இல்லாத வகையில், நீதித்துறையில்தான் உடன் பணியாற்றும் நீதிபதிகளை சகோதர, சகோதரி என்று அழைக் கிறோம். இந்த குற்றச்சாட்டு துரதிஷ்ட வசமானது.
இதுவரை எனக்கு எந்தப் புகாரும் வரவில்லை. முறைப்படி புகார் வந்தால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க உத்தரவிடப்படும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நிச்சயம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.
புகாருக்கு உள்ளாகி இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, ‘என் மீது தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தூக்கு தண்டனையையும் ஏற்கத் தயார்.’ என்று குறிப்பிட்டுள்ளார். புகார் தெரிவித்துள்ள பெண் நீதிபதி, குவாலியர் மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டியின் தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT