Published : 28 Jun 2024 12:30 PM
Last Updated : 28 Jun 2024 12:30 PM
புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன.
தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது.
கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்துள்ளனர். பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். டெர்மினல் 1 பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் தான் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. இதனை வைத்து மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக முழுமையடையாத டெர்மினல் 1 பகுதியை, பிரதமர் மோடி, அவசரமாக திறந்து வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த 10 ஆண்டுகால மோடி அரசில், உள்கட்டமைப்பு சீர்குலைந்ததற்கு ஊழல் மற்றும் அலட்சியமே காரணம். மார்ச் 10 அன்று, டெல்லி விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தபோது, மோடி ஜி தன்னை தானே துணிச்சலான மனிதர் என்றார். இந்த பொய்யான பேச்சுக்கள் எல்லாம் தேர்தலுக்கு முன் ரிப்பன் வெட்டும் விழாக்களில் விரைவாக கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே!. டெல்லி விமான நிலைய சோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று விமர்சித்துள்ளார்.
தேசிய மாநாட்டு தலைவர் உமர் அப்துல்லா தனது பதிவில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் முன்பே திறக்க வேண்டும் என்பதற்காக முழுமையடையாத டெல்லி விமான நிலைய முனையம் திறக்கப்பட்டது. தற்போது நடத்தை விதிகள் முடிந்த நிலையில் உடைந்து விழத் தொடங்குகிறது. என்ன ஆச்சரியம்!" என்று தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாய், "தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்த முனையத்தை பிரதமர் மோடி அவசரமாக திறந்தார். இந்த விபத்தில் பிரதமர் மோடி மீது ஏன் குற்றம்சாட்டக்கூடாது?. மோடி பிரச்சாரம் செய்ய ஆசைப்பட்டதால், உயிரிழந்த மூன்று பேரின் மரணத்திற்கு அவர் நேரடியாகப் பொறுப்பு ஏற்கவேண்டும்." என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “இந்தச் சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். பிரதமர் மோடி திறந்து வைத்த கட்டிடம் மறுபுறம் உள்ளது. இப்போது இடிந்து விழுந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது 2009-ல் திறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT