Published : 28 Jun 2024 05:29 AM
Last Updated : 28 Jun 2024 05:29 AM
புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பிஹாரில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குஜராத்தின் கோத்ரா நகரில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய குறிப்பிட்ட 6 மாணவர்களின் விடைத்தாள்களில், தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளர்கள் துஷார் பட்,புருஷோத்தம் சர்மா ஆகியோர் சரியான விடைகளை நிரப்பி சமர்ப்பித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு தொடர்புடைய இடைத்தரகர்கள் பரசுராம் ராய், ஆரிப் வோரா, விப்கார் ஆனந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம், ரூ.2.3 கோடிக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய கல்வித் துறையின் பரிந்துரையின் பேரில் குஜராத் உட்பட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் கடந்த 23-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் ஒரு மழலையர் பள்ளியை கடந்தமே 4-ம் தேதி ஒரு நாள் வாடகைக்கு எடுத்து 25 மாணவர்களை தங்க வைத்து நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அவர்கள் விடைகளை மனப்பாடம் செய்தனர்.
அந்த மழலையர் பள்ளியை மணீஷ் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைதுசெய்தனர். அவருடைய நண்பர் அசுதோஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய பிறகு இரு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜார்க்கண்டின் ஹசாரிபாக் பகுதியில் செயல்படும் ஒரு பள்ளிக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள் பெட்டிகள் முன்கூட்டியே உடைக்கப்பட்டு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பள்ளியின் முதல்வர் ஹசன் உல்-ஹக்கிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
‘சால்வர் கேங்’ கும்பல்: பிஹாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘சால்வர் கேங்’ என்ற சமூகவிரோத கும்பலே நீட் வினாத்தாள் கசிவுக்கு முக்கிய காரணம் என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீட் தேர்வு மட்டுமன்றி நெட் தேர்வு, பிஹார் வருவாய் அலுவலர்கள் தேர்வு, பிஹார் ஆசிரியர் பணிதேர்வு, உத்தர பிரதேச காவலர் பணி தேர்வு ஆகிய போட்டித் தேர்வுகளின்போது வினாத்தாள் கசிந்ததில் ‘சால்வர் கேங்’ கும்பலுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. இந்த கும்பலின் தலைவர் சஞ்சீவ் (53) என்பவரை சிபிஐ அதிகாரிகள் அதிதீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உத்தராகண்ட் போலீஸார் சஞ்சீவை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அவர்தலைமறைவானார். அவரது மகன்மருத்துவர் சிவகுமாரும் ‘சால்வர் கேங்’ கும்பலின் மூத்த தலைவராக உள்ளார். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT