Last Updated : 28 Jun, 2024 07:01 AM

2  

Published : 28 Jun 2024 07:01 AM
Last Updated : 28 Jun 2024 07:01 AM

மக்களவையில் வைத்த செங்கோலுக்கு சமாஜ்வாதி எதிர்ப்பு: ஸ்டாலின் நிலைப்பாடு குறித்து பாஜக கேள்வி

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் வைக்கப்பட்ட செங்கோலை அகற்றும்படி, சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தி உள்ளார். இதன் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில் நேற்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக நாடாளுமன்றம் வந்த குடியரசுத் தலைவரை பிரதமர், சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களுக்கு முன்பாக மக்களவை மார்ஷல், செங்கோலை உயர்த்தியவாறு சென்று வரவேற்றார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடியால் விழா நடத்தி மக்களவையில் செங்கோல் நிறுவப்பட்டது. அப்போது செங்கோல் நிறுவப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் செய்த விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது. செங்கோலை அகற்ற வலியுறுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் “நம் நாட்டில் ஜனநாயகம் தழைப்பதாகக் காட்ட வேண்டும் எனில் செங்கோல் அகற்றப்பட வேண்டும். ஏனெனில், இந்தியாவில் ஜனநாயகம் தான் உள்ளதே தவிர, முடியாட்சி அல்ல. செங்கோல் என்பது அக்கால ராஜாக்களின் தண்டம்ஆகும். தர்பாரில் அமரும் அரசர்கள் தங்கள் கைத்தடியாக இந்தசெங்கோலை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்தனர். இதை வைத்துக்கொண்டு அவர் எதுவும் உத்தரவிட்டால், இட்டதுதான். இப்போது இந்தியாவில் அரசியல் சாசனத்தின் கீழ் ஆட்சி உள்ளது. இங்கு ஜனநாயகமும் உள்ளதை மறந்து விடக்கூடாது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “கடந்த கூட்டத்தில் நிறுவப்பட்ட செங்கோலுக்கு பிரதமர் வணங்கி மரியாதை செலுத்தினார். இந்த முறை பதவியேற்றபோது அதை வணங்க மறந்து விட்டார்.இதை பிரதமருக்கு நினைவூட்டுவதற்காக எங்கள் எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்” என்றார்.

இதை கண்டித்து பாஜக செய்தித் தொடர்பாளர் செஹஷாத் புனாவாலா கூறும்போது, “இதற்கு முன் ராமச்சந்திர மானஸை அவமதித்த சமாஜ்வாதி இப்போது செங்கோலை அவமதிக்கிறது. செங்கோலை அகற்றக் கூறுவதன் மூலம்அதனுடன் இணைந்துள்ள நமதுஇந்திய கலாச்சாரத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன. இது அரசாட்சியின் சின்னம் எனில் அதை முதல்பிரதமரான நேரு ஏற்றது ஏன்? அவர்அரசாட்சியை ஆதரிக்கிறாரா? இதன் மீது, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை விளக்கவேண்டும்” என்றார்.

யோகி ஆதித்யநாத் கண்டனம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் வலைதளத்தில் தமிழில்வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. செங்கோல் பற்றிய அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் கருத்துகள் கண்டனத்திற்கு உரியவை மட்டுமின்றி, அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

செங்கோல் இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமைசேர்த்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x