Published : 27 Jun 2024 05:27 PM
Last Updated : 27 Jun 2024 05:27 PM

“தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இண்டியா கூட்டணி” - செங்கோல் குறித்து யோகி ஆதித்யநாத்

சென்னை: "நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற கூறியிருப்பது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது" என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என பாஜக கூறிவருகிறது. மேலும், இது தொடர்பாக பாஜக எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்தான் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சியை சாடியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்" என்று யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x