Published : 27 Jun 2024 12:43 PM
Last Updated : 27 Jun 2024 12:43 PM

“அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதல்” - குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற்ற எமர்ஜென்சி

புதுடெல்லி: எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அங்கு 370வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது.” என்று தெரிவித்தார்.

எமர்ஜென்சியை தனது உரையில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னதாக, நேற்று சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவும் எமர்ஜென்சி தொடர்பாக அவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் தீர்மானம்: “1975ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும் விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அவை எப்போதும் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தேசமும் அப்போது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித்துறையின் தன்னாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x