Published : 27 Jun 2024 12:12 PM
Last Updated : 27 Jun 2024 12:12 PM

எதிர்க்கட்சிகளின் ‘நீட்’, ‘மணிப்பூர்’ முழக்கங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: “ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை.

பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டில் தொலைநோக்குடன் கூடிய பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. கரோனா பெருந்தொற்று, போர் போன்ற சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் உறுதிமொழி இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இது சாத்தியமானது.

இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விவசாயம், தொழில்நுட்படம், சேவை துறைக்கு இந்த அரசால் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு நம் நாடு தீர்வு காணும் என்று உலக அரங்கில் நம்பப்படுகிறது.

பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் அரசு ரூ.3.20 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. புதிய ஆட்சிக் காலம் தொடங்கியதில் இருந்து விவசாயிகளுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. காரீஃப் பயிர்களுக்கான எம்எஸ்பி விலையிலும் இந்த அரசாங்கம் சாதனை படைத்துள்ளது.

இன்றைய இந்தியா அதன் தற்போதைய தேவைகளை மனதில் கொண்டு விவசாய முறையை மாற்றி வருகிறது. இப்போதெல்லாம், ஆர்கானிக் பொருட்களின் தேவை உலகில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய இந்திய விவசாயிகளுக்கு முழு திறன் உள்ளது. எனவே, அரசு இயற்கை விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விநியோக சங்கிலியை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் முன்முயற்சியில், உலகம் முழுவதும் 2023ம் ஆண்டில் சர்வதேச திணை தினத்தை கொண்டாடியது.

சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சாலைகள் உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பெண்களுக்காக பல்வேறு சுயதொழில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. அரசின் பல்வேறு திட்டங்களால் நாட்டில் பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது அரசின் திட்டங்களால் சாத்தியமானது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக, கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டில் 4 மடங்குக்கு மேல் நிதியை உயர்த்தியுள்ளது. அனைத்து வகையான இணைப்புகளும் வடகிழக்கு வரை நீட்டிக்கப்படுகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகாரம் பெற்றால்தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். எனவே அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அரசின் ஒவ்வொரு திட்டத்தின் பலன்களையும் அவர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். அரசு திட்டங்களில் இருந்து ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற மன உறுதியுடன் அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை அரசு ஒருங்கிணைத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா மற்றும் தபால் நிலைய நெட்வொர்க்கைப் பயன்படுத்தி விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டின் கவரேஜை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் அபியான் திட்டங்கள் மூலமாக ஏழைகளின் வாழ்க்கையின் கண்ணியம், அவர்களின் ஆரோக்கியம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு முதல்முறையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.

திறமையான இந்தியாவுக்கு, நமது பாதுகாப்புத் துறையின் நவீனத்துவம் பெறுவது அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த, பாதுகாப்புத் துறையில் சீர்திருத்த செயல்முறைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த மனநிலையுடன், கடந்த 10 ஆண்டுகளில் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

சீர்திருத்தங்களால், இந்தியா 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1 தசாப்தத்தில் பாதுகாப்பு ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து ரூ.21,000 கோடியை தொட்டுள்ளது.

இந்த அரசு மேலும் ஒரு முடிவை எடுக்கப் போகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்ப்பு, சுயநலம் போன்றவற்றால், ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தையும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தையும் கடுமையாக பாதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது எல்லாம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் உதவுகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலங்களின் லாபம் அதிகரித்துள்ளது. ஜூலை முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும். இனி தண்டனை அல்ல, புதிய சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும்.

தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்படும்." என்று உரையாற்றினார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் உரையாற்றும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர் என முழக்கமிட்டனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசும்போது இவ்வாறு முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் மருத்துவக்கல்லூரி குறித்தும், தேர்வு முறைகள் குறித்தும் பேசும்போது நீட்.. நீட் என எதிர்ப்புகள் எழுப்பினர். “தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

இதேபோல் பாதுகாப்புத் துறை குறித்து பேசும்போது அக்னிவீர், அக்னிவீர் என்று முழக்கம் எழுப்பினர்.

இதேபோல் உரையின் தொடக்கத்திலேயே "பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்ததை குறிப்பிடும் வகையில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போதிய வாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்வது அரசின் கடமை. சமீபத்தில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவுகளை பார்த்திருக்கிறோம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதற்கு நாடு தழுவிய உறுதியான தீர்வு தேவை. தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்கியுள்ளது.

சிஏஏ சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நடவடிக்கை அரசு தொடங்கியுள்ளது. சிஏஏ சட்டம் மூலமாக குடியுரிமை பெற்ற குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த அரசு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன் இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நிலைநாட்டி வருகிறது.

இன்று இந்திய இளைஞர்கள் விளையாட்டிலும் புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். அரசாங்கத்தின் முயற்சியின் விளைவாக, இந்திய இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில், பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.

இதில், இந்தியா சார்பில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நினைத்து பெருமை கொள்கிறோம். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாதனைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகிறது. 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x