Published : 27 Jun 2024 11:08 AM
Last Updated : 27 Jun 2024 11:08 AM
புதுடெல்லி: மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.
முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், “இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
மேலும், தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா?. தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சி அதனை எதிர்க்கிறது. அவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
கோரிக்கை நிராகரிப்பு: இந்நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதனடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என பாஜக எம்பிக்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT