Published : 27 Jun 2024 08:44 AM
Last Updated : 27 Jun 2024 08:44 AM
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது.
முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1980-ல் பாஜக தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் எல்.கே.அத்வானி. 1990-களில் பாஜகவை எழுச்சி பெறச் செய்ததில் அத்வானி முக்கியப் பங்காற்றியவர். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணை பிரதமராக பதவி வகித்த எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரியில் நாட்டின் மிகஉயரிய விருதான பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT