Published : 27 Jun 2024 05:54 AM
Last Updated : 27 Jun 2024 05:54 AM

நான் எழுதிய கட்டுரையை ரசித்து படித்தார் அப்துல் கலாம்: நினைவு கூர்ந்தார் சுதா மூர்த்தி எம்.பி.

கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பத்ம  விருது பெற்ற சுதா மூர்த்தி எம்.பி.

புதுடெல்லி: ‘‘நான் எழுதும் கட்டுரைகளை ரசித்து படித்தாக அப்துல் கலாம் எனக்கு போன் செய்து கூறினார்’’ என மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73). இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது இவர் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவரது மகள் அக் ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் கடந்த 2006-ம்ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற படத்தை எக்ஸ் தளத்தில் சுதா மூர்த்தி வெளியிட்டு அவரிடம் இருந்து வந்த போன் அழைப்பு பற்றி கூறியதாவது:

‘ராங் கால்’ - ஒரு நாள் எனக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அப்துல்கலாம் உங்களிடம் பேச விரும்புகிறார் என போன் ஆபரேட்டர் கூறினார். நான் அவரிடம், ‘‘இது தவறுதலான அழைப்பு (ராங் கால்) என நினைக்கிறேன். அப்துல் கலாமுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவேளை எனது கணவர் நாராயண மூர்த்திக்கு வந்திருந்த அழைப்பாக இருக்கலாம், அவருக்கு பதில் நீங்கள் என்னிடம் தொடர்பு கொண்டுள்ளீர்கள்’’ என தெரிவித்தேன்.

உடனே அந்த ஆபரேட்டர், ‘‘அப்துல் கலாம் குறிப்பாக உங்களிடம்தான் பேச விரும்புகிறார்’’ என கூறியதும், அவரிடம் இருந்து அழைப்பு வரும் அளவுக்கு நாம் என்ன செய்தோம்’’ என்ற தயக்கத்துடன் போனில் தொடர்ந்து பேசினேன்.

அப்போது பேசிய அப்துல் கலாம், ‘ஐடி டிவைட்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றும், எனது கட்டுரைகளை அவர் எப்போதும் படிப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

நான் கடைக்கு சென்றபோது ஒரு மாம்பழ வியாபாரி என்னிடம் 1 டஜன் பழங்கள் ரூ.100 என்றும், எனது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனது மாணவி ஒருவருக்கு ரூ.200-க்கும் விற்றது குறித்து வியாபாரியிடம் கேட்டேன். அதற்கு அந்த வியாபாரி. ‘நீங்கள் பள்ளி ஆசிரியை, உங்களுக்கு அதெல்லாம் புரியாது. அந்த பெண்ஐ.டி. நிறுவனத்தில் அதிக சம்பளம்பெறுகிறார். அதனால் ரூ.200-க்கு விற்றேன்’ என கூறியது பற்றி ஐ.டிடிவைட் கட்டுரையில் எழுதியிருந்தேன். இதை படித்து, அப்துல் கலாம் என்னை பாராட்டினார்.

இவ்வாறு சுதா மூர்த்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x