Published : 27 Jun 2024 05:09 AM
Last Updated : 27 Jun 2024 05:09 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற 18-வது மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய மக்களவை தலைவரை தேர்வுசெய்வதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்மூத்த உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் தலைமையில் மக்களவை நேற்று காலை கூடியதும், புதிய மக்களவை தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கின. முதலில், ஆளும்கட்சி வேட்பாளர் ஓம் பிர்லாவின்பெயரை பிரதமர் மோடி முன்மொழிய, அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்வழிமொழிந்தனர். இண்டியா கூட்டணி வேட்பாளர் சுரேஷ் பெயரை அக்கூட்டணி கட்சி தலைவர்கள் முன்மொழிந்தனர்.
இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் புதிய மக்களவை தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக மஹதாப் அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஓம் பிர்லாவிடம் சென்று, வாழ்த்து தெரிவித்தார். ‘‘மக்களவை தலைவர் பதவிக்கு 2-வதுமுறையாக நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய சாதனை அமிர்த காலத்தில் 2-வது முறையாக இந்த இருக்கையில் அமர்ந்துள்ள உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உங்கள்அனுபவம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களை நன்கு வழிநடத்துவீர்கள் என நம்புகிறோம்’’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பிர்லாவுக்கு கைகுலுக்கிவாழ்த்து தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘‘கடந்த முறையைவிட இந்த முறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகஅளவில் வெற்றி பெற்றுள்ளனர். நாட்டு மக்களின் குரலை இங்கு எதிரொலிப்போம். மக்களின் குரலை பிரதிபலிக்க அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்’’ என்றார்.
மோடியுடன் கைகுலுக்கிய ராகுல்: பின்னர், பிரதமர் மோடியுடனும் ராகுல் காந்தி கைகுலுக்கினார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிய நிலையில், நேருக்கு நேர் கைகுலுக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர், இரு தலைவர்களும் ஓம் பிர்லாவை அழைத்து சென்று மக்களவை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உடன் இருந்தார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஓம்பிர்லாவை வாழ்த்தி பேசினர்.
பல்ராம் ஜாக்கருக்கு அடுத்து.. காங்கிரஸ் கட்சியின் பல்ராம் ஜாக்கர் கடந்த 1980 முதல் 1989 வரை மக்களவை தலைவராக பதவி வகித்துள்ளார். நீண்ட காலம் இப்பதவியை வகித்தவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. அவருக்கு அடுத்தபடியாக, மக்களவை தலைவர் பதவிக்கு 2-வது முறையாக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவையில் ஓம் பிர்லா பேசும்போது, ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வாகி நாம் இங்குவந்திருக்கிறோம். நம்மிடம் மக்கள்நிறைய எதிர்பார்க்கின்றனர். எனவே, இந்த அவை முடங்காமல் சுமுகமாக நடைபெறும் என நம்புகிறேன். நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். அவையின் மாண்பை காக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீதியில் போராட்டம் நடத்துவதற்கும், அவையில் போராடுவதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்’’ என்றார்.
அவசரநிலை கறுப்பு நாள்: பின்னர் ஓர் அறிக்கையை வாசித்த அவர், ‘‘பாபா சாஹிப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் மீது 50 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தாக்குதல் நடத்தினார். கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. இந்தநாள், இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என எப்போதும் அறியப்படும். அந்த பிரகடனத்தை இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அவசரநிலையை எதிர்த்து போரிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.அவசரநிலையை நினைவுகூரும் வகையில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து மவுனம் காக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவை 27-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டது.
மாநிலங்களவை இன்று கூடுகிறது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT