Published : 27 Jun 2024 07:09 AM
Last Updated : 27 Jun 2024 07:09 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு இந்தஅந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது.
கடந்த 2004 முதல் 20 வருடஅரசியல் வாழ்வில் ராகுலுக்குமுதன்முறையாக அரசியல் சாசனப்பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன.
எதிர்க்கட்சி தலைவருக்கு டெல்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250சதுர அடி ஆகும். தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் உதவியாளர்களுக்கு என 4 சிறிய குடியிருப்புகள் வளாகத்தில் உள்ளன. இந்த பங்களாவில் அரசு செலவில் சோபா, மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அளிக்கப்படும். டெல்லியில் இந்த அளவிலான ஒரு பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும். வாடகை என்றால் பல லட்சம் ஆகும்.
இதுபோன்ற பங்களாவில் ராகுல் வசிப்பது இது புதிதல்ல. இதற்குமுன், அவரது பாட்டி இந்திரா காந்தியின் பிரதமர் இல்லத்தில் ராகுல் தனது சிறு வயதில் வாழ்ந்துள்ளார். பிறகு தனது தந்தை ராஜீவ் காந்தி பிரதமரான போதும் அதில் இருந்தார். ராகுலின் தாய் சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களாவும் இதே வகையை சேர்ந்தது.
ரேபரேலி எம்.பி.யாக தேர்வான ராகுல் வசிக்கும் துக்ளக் சாலை வீடும் இதே டைப்-8 வகை பங்களா எனத் தெரிகிறது. எனினும் இதில் பிற வசதிகள் இல்லாத நிலையில் இதிலேயே அவர் தொடர்வரா அல்லது புதிய இடத்துக்கு மாறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.
ராகுலின் அரசியல் சாசனப் பதவியானது, கேபினட் அமைச்சருக்கு இணையானது. எம்.பி.யாக ராகுலுக்கு ரூ.2 லட்சம் மாத ஊதியம் கிடைத்த நிலையில் இனி இது ரூ.3.3 லட்சமாக இருக்கும். இதுதவிர இப்பதவிக்கு என மாதச்செலவுகளும் உண்டு. எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு அரசு சார்பில் 14 உதவியாளர்கள் கிடைப்பார்கள்.
இருப்பினும் அவருக்கு இதுவரை கிடைத்து வந்த எம்.பி.க்கான சலுகைகள் கிடைக்காது. எனினும் எம்.பி.களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி (ஆண்டுக்கு ரூ.5 கோடி) எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கும் உண்டு.
கடந்த 10 வருடங்களாக அவையில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என ராகுல் புகார் கூறி வந்தார். ஆனால், எதிர்க்கட்சி தலைவராகிவிட்ட அவருக்கு இனிஅனைத்து விவகாரங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு முக்கிய இடம் அளிக்கப்படும். இந்த சமயங்களில் எதிர்க்கட்சிகளின் குரலாக ஒலிக்கும் பொறுப்பு ராகுலுக்கு உள்ளது.
மக்களவைக்கு 5-வது முறையாக தேர்வாகியுள்ள ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மிக இளம் வயதில் கிடைத்துள்ளது. லோக்பால் தலைவர், சிபிஐ இயக்குநர், தேர்தல் ஆணையர், மத்திய தகவல் ஆணையர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமருடன் ராகுல் இடம்பெறுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT