Published : 26 Jun 2024 12:21 PM
Last Updated : 26 Jun 2024 12:21 PM
புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.
கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் அஜர்படுத்தினர். மேலும், கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்திடம் சிபிஐ அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
ஜாமீன் வழக்கின் பின்னணி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஜூன் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) சார்பில் ஜூன் 21-ம் தேதி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, முதலில் ஜாமீன் உத்தரவை நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம், பின்னர் ஜாமீன் உத்தரவை ரத்து செய்தது.
ஜாமீன் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்ட உடனே, கேஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT