Published : 26 Jun 2024 05:24 AM
Last Updated : 26 Jun 2024 05:24 AM

கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைகிறாரா ஜெகன்? - பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தை

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடலாமா என்று தீவிரமாக ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில்இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றது. இது ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியினருக்கும் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 இடங்களில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் தவறுகள், தெலுங்கு தேசம் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகி உள்ளது.

ஜெகன் கட்சியின் 11 எம்எல்ஏக்களில் சிலர் கட்சி தாவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் சிறைசெல்ல நேரிடும். 7 ஆண்டுகள் வரைதேர்தலில் போட்டியிட முடியாதசூழல் ஏற்படும். அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு தேசிய கட்சியின் ஆதரவு தேவை என்று ஜெகன் கருதுகிறார்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில் தெலுங்கு தேசத்தின் ஆதரவு பாஜகவுக்கு மிகவும்அவசியமாகி உள்ளது. பாஜக கூட்டணியில் ஜெகனை இணைத்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார்.

பாஜகவுக்கு அடுத்து காங்கிரஸ்மட்டுமே தேசிய கட்சி ஆகும். ஜெகனின் குடும்பத்தினர் முழுவதும் காங்கிரஸ்காரர்கள். இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2 முறை ஆந்திர காங்கிரஸ் முதல்வராக பதவி வகித்தார்.இவரது மறைவுக்கு பிறகுதான் ஜெகனுக்கும் சோனியா காந்திக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.இதன்காரணமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை ஜெகன் தொடங்கினார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானாவை அப்போதைய காங்கிரஸ் அரசு பிரித்து கொடுத்ததால் ஆந்திர மக்களிடம் அந்த கட்சி செல்வாக்கை இழந்தது. இப்போதுவரை ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை.

அண்மையில் ஜெகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரது தாய் விஜயலட்சுமி, தங்கை ஷர்மிளா தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கிய ஷர்மிளா, அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார் அண்மையில் நடந்த சட்டப்பேரவை, மக்களவை தேர்தலில் ஜெகனுக்குஎதிராக ஷர்மிளா செய்த தீவிர பிரச்சாரத்தால் ஜெகனுக்கு அவப்பெயர்ஏற்பட்டது.

இந்த சூழலில் கட்சியை கலைப்பதை தவிர ஜெகனுக்கு வேறு வழியில்லை. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் உள்ள தனது ‘லோட்டஸ் பேலஸில்’ தங்கியுள்ள அவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஆந்திர காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கும் தங்கை ஷர்மிளாவை நீக்கிவிட்டு தன்னை மாநில தலைவராக்கினால் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸிஸ் இணைய தயார் என ஜெகன் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x