Published : 25 Jun 2024 05:38 PM
Last Updated : 25 Jun 2024 05:38 PM

ரேபரேலி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி: தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி ஏற்பு

ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக மூத்த தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர்.

18-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து மோடி அரசு மீண்டும் பதவியேற்றதை அடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) கூடியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி உள்பட 280 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள மக்களவை உறுப்பினர்கள் இன்று(ஜூன் 25) பதவியேற்று வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தமிழில் உறுதிமொழி: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், "மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதிகூறுகிறேன். வாழ்க இவ்வையகம்! வாழ்க தமிழ்! ஜெய் ஜகத்!" என தமிழில் கூறி பதவியேற்றார். பதவியேற்பு உறுதிமொழியோடு, “சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மீதான வெட்ககரமான தாக்குதலை நிறுத்துங்கள். ஜெய் பீம்! ஜெய் சம்விதான்(அரசியலமைப்பு)!”என்றும் அவர் கூறினார்.

அவரைப் போலவே, திமுக எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x