Published : 25 Jun 2024 03:52 PM
Last Updated : 25 Jun 2024 03:52 PM

கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு தடை - டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை தடை செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அமலாக்கத்துறை மறுநாளே (ஜூன் 21) டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது தடைபட்டது.

ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்பதாக நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தெரிவித்தார்.

மேலும் அவர், “அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த பதிவில் உள்ள உள்ளடக்கத்தை விசாரணை நீதிமன்றம் சரியான முறையில் கவனிக்கவில்லை. இந்த வழக்கில் வாதிட போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவின் வாதத்தை ஏற்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (ஜூன் 26) விசாரணைக்கு வர உள்ளது.

வழக்கின் பின்னணி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஜூன் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) சார்பில் ஜூன் 21-ம் தேதி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தவறானது. முழுமையான வாதத்தை முன்வைக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய எனக்கு 2-3 நாட்கள் நேரம் வழங்கப்படவில்லை. விசாரணை நீதிமன்றம் அரை மணி நேரத்தில் தீர்ப்பை வழங்க விரும்புவதாக கூறியது. வழக்கை வாதிடுவதற்கு எங்களுக்கு முழு வாய்ப்பை வழங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை மிகவும் கவனமாக முன்வைக்கிறேன். எனவே, ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் விக்ரம் சவுத்ரி ஆகியோர், அமலாக்கத் துறை வழக்கறிஞர் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினர். தேர்தல் பிரச்சாரத்துக்காக கேஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் விடுவித்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு வழக்கை விசாரித்தது. கேஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்திவைத்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் உத்தரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரட்டும். அதுவரை காத்திருப்போம்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “அமலாக்க இயக்குநரகத்தின் மனு மீது உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஏன் சுதந்திரமாக இருக்கக் கூடாது?" என வாதிட்டார். முதல்வருக்கு சாதகமாக ஜாமீன் உத்தரவு உள்ளது என்றும், அவர் ஒன்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடப் போவதில்லை என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்றம், “இந்த மனு மீது இப்போது தீர்ப்பு வழங்கினால் அது முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டதாக இருக்கும். ஜாமீனை நிறுத்திவைத்திருப்பது துணை நீதிமன்றம் அல்ல, உயர் நீதிமன்றம்” என்று தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x