Published : 25 Jun 2024 08:33 AM
Last Updated : 25 Jun 2024 08:33 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள் நடந்துள்ளன.
1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, 4. நீட் மருத்துவத் தேர்வு ஊழல், 5. நீட் முதுகலை தேர்வு ரத்து, 6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டண விலை உயர்வு, 8. காட்டுத்தீ பிரச்சினை, 9. தண்ணீர் பஞ்சம், 10. வெப்ப அலை தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் அதிக அளவிலான உயிரிழப்புகள் என பிரச்சினைகள் உருவாகி நாட்டிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை. பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க மாட்டோம். எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்தியாவின் பலமான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் கட்சி அழுத்தம் தருவதை தொடரும். இந்த விஷயங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் பிரதமர் மோடி தப்ப முடியாது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT