Published : 25 Jun 2024 08:09 AM
Last Updated : 25 Jun 2024 08:09 AM
புதுடெல்லி: நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்கு பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வழக்கத்துக்கு மாறாக 67 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிஹாரில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கசியத் செய்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த சில நாட்களில் யுஜிசி- நெட் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான முகாந்திரம் இருப்பதாக கூறி இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மாணவர்கள், எதிர்க்கட்சியினரின் போராட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்தது.
சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணையை ஏற்றுக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தது. இந்நிலையில் நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்த விசாரணை நான்கு கட்டங்களாக நடைபெறும். வினாத் தாள்களை உருவாக்குவது மற்றும் அச்சிடுவது முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் விநியோகிப்பது வரை ஒவ்வொரு அம்சமும் ஆய்வு செய்யப்படும்.
இந்தத் தேர்வுகளை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை, வினாத் தாளின் ரகசியத் தன்மையை பேணுவதற்கான கடுமையான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள் எங்கு மீறப்பட்டாலும் அது கவலைக்குரிய விஷயமாகும்.
வினாத் தாள்களை தயாரித்தல், அச்சிடுதல், அவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், தேர்வு தொடங்கும் வரை அவற்றை பத்திரமாக வைத்திருத்தல் ஆகிய நடைமுறைகளில் நேரடியாக ஈடுபடும் நபர்கள் மீதும் சிபிஐ அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில் இந்த நடைமுறைகளில் நெறிமுறை மீறலுக்கான சாத்தியம் இருப்பதாக சிபிஐ கருதுகிறது.
முந்தைய விசாரணைகளின் போது தொகுக்கப்பட்ட 1,000 பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களின் தரவுத்தளத்தை பயன்படுத்தி, வினாத்தாள் கசிவுகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சிபிஐ முயன்று வருகிறது.
வியாபம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து பெறப்பட்ட இந்தத் தரவுகள், சந்தேக நபர்களை அடையாளம் காணவும், கசிவுகளுக்குப் பின்னால் உள்ள தகவல் தொடர்பு முறைகளை கண்டறியவும் உதவும்.
மேலும் இந்த விவகாரத்தில் ஆதாரங்களை திரட்டுவதற்காக பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் சிபிஐ குழுக்களை அனுப்பியுள்ளது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஹாரில் மேலும் 5 பேர் கைது: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் பிஹாரில் 13 பேரையும் ஜார்க்கண்டில் 6 பேரையும் பிஹார் போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிஹாரின் நாளந்தா பகுதியை சேர்ந்த 5 பேரை பிஹார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் நீட் வினாத்தாள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பிஹாரின் நாளந்தா மாவட்டம், குஸியாதி கிராமத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்த சென்றனர்.
அப்போது அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து, சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சிபிஐ குழுவின் ஓட்டுநர், காவலர் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment