Published : 24 Jun 2024 05:19 PM
Last Updated : 24 Jun 2024 05:19 PM
புவனேஸ்வர்: "நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே" என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜேடி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜேடி ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.
மாநிலங்களவைக்கு அக்கட்சிக்கு 9 எம்பிக்கள் உள்ளனர். இந்தநிலையில் தான், நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்று பிஜேடி அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரச்சினையின் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளம் கடைபிடித்து வந்தது. இதனால், பாஜக பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்ற பிஜேடியை நம்பியிருந்தது. அதற்கு உதாரணம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக பிஜேடி உதவி புரிந்தது.
இதற்கிடையேதான் மெகா தோல்விக்கு பிறகு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கும் பிஜேடி, இனி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்கிற புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவீன் பட்நாயக் தலைமையில் இன்று நடந்த பிஜேடி மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் ராஜ்யசபா தலைவர் சஸ்மித் பத்ரா, “இந்த முறை பிஜேடி எம்.பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்தும். மேலும் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையையும் வலுவாக வலியுறுத்துவோம். நிலக்கரி ராயல்டியை திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையையும் இம்முறை மிக தீவிரமாக எடுத்துவைப்போம்.
இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே. எனவே, ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்கான அறிவுரைகளை எங்களுக்கு நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தளம் கட்சியை போலவே கடந்த முறை பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக இருந்தது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. தற்போது ஆந்திராவில் இக்கட்சி ஆட்சியை இழந்தாலும், அவர்கள் வசம் 11 ராஜ்ய சபா எம்.பிக்கள், 4 மக்களவை எம்.பிக்கள் என மொத்தம் 15 எம்.பிக்கள் உள்ளனர்.
இதனை முன்வைத்து, கடந்த வாரம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வசம் 15 எம்.பிக்கள் உள்ளனர். அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பிக்கள் உள்ளனர். இதனை மறந்துவிட கூடாது. எங்களை யாரும் தொட முடியாது" என்று பாஜகவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது குறிப்பித்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT