Published : 24 Jun 2024 12:24 PM
Last Updated : 24 Jun 2024 12:24 PM
புதுடெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து பாஜக எம்.பி அரவிந்த் தர்மபுரி கேள்வி எழுப்பியுள்ளார். இவர் தெலங்கானாவின் நிசாமாபாத் எம்.பி தொகுதி உறுப்பினர் ஆவார்.
“தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்தும் முறை மிகவும் அவல நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள்.
எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து இப்போது பேசி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என எல்லோரும் மவுனம் காப்பது ஏன்?” என அரவிந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி உள்ளது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர். இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மக்களவை வளாகத்தில் பாஜக எம்.பி அரவிந்த், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT