Published : 24 Jun 2024 05:33 AM
Last Updated : 24 Jun 2024 05:33 AM

இஸ்ரோ சார்பில் 3-வது முறையாக புஷ்பக் விண்கலம் தரையிறங்கும் சோதனை வெற்றி

பெங்களூரு: இஸ்ரோ தயாரித்த ‘புஷ்பக்’ என்ற மறுபயன்பாட்டு விண்கலத்தின் (ஆர்எல்வி) மூன்றாவது தரையிறங்கும் சோதனை பெங்களூரு அருகே நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குமறுபயன்பாட்டு விண்கலம் அவசியம். இதற்காக மறுபயன்பாட்டு விண்கலத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கி, அதை ஹெலிகாப்டரில் தூக்கிச் சென்று வானில் இருந்து விடுவித்து, விண்கலத்தை தானாகதரையிறங்க வைக்கும் சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

‘புஷ்பக்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆர்எல்வி-யை ஏற்கனவே இரண்டு முறை தரையிறக்கும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-வது முறையாக ஆர்எல்வி தரையிறக்கும் சோதனை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சலக்கேரி என்ற இடத்தில்அமைக்கப்பட்டுள்ள ஏரோநாடிக்கல் பரிசோதனை மையத்தில் நேற்று காலை 7.10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

விமானப்படையின் சிணுக் ரகஹெலிகாப்டர், புஷ்பக் விண்கலத்தை வானில் 4.5 கி.மீ உயரத்துக்கு தூக்கிச் சென்று விடுவித்தது. அதன்பின் ஆர்எல்வி தானாகஇயங்கி, ஓடு பாதையில் மணிக்கு320 கி.மீ வேகத்தில் தரையிறங்கியது. ஓடு பாதையில் புஷ்பக் விண்கலம் துல்லியமாக தரையிறங்கியதும், அதில் உள்ள பாராசூட் புஷ்பக் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 100.கி.மீ. ஆக குறைத்தது.

அதன்பின் விண்கலத்தின் பிரேக்குகள் இயக்கப்பட்டு புஷ்பக் விண்கலம் நிறுத்தப்பட்டது.

விண்ணில் இருந்து பூமி திரும்பும் விண்கலம் மிக வேகமாக வரும் என்பதால், புஷ்புக் விண்கலம்மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் புஷ்பக் விண்கலம் விண்ணுக்கு சென்று மீண்டும் பூமி திரும்பும் பரிசோதனைக்கு தயாராகிவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x