Published : 24 Jun 2024 06:32 AM
Last Updated : 24 Jun 2024 06:32 AM
சென்னை: நாட்டு மக்களுக்கு விரைவான நீதியை நிலைநாட்டும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்களால் இன்னும் 5 ஆண்டுகளில் தலைசிறந்த சட்ட கட்டமைப்பை நாம் கொண்டிருப்போம் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் ‘‘குற்றவியல் நீதிமுறை நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றப்பாதை’’ என்ற தலைப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த 4-வது தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், கப்பல் படை அதிகாரிகள், சட்ட மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசியதாவது:
இந்தியர்களை தண்டிக்கும் நோக்கில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 1860-ஐ பிரதமர்மோடி அரசாங்கம் பாரதிய நியாயசன்ஹிதா 2023 (பிஎன்எஸ்) என்றும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973-ஐ பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சியச் சட்டம் 1872-ஐ பாரதிய சாக்ஷய அதிநியம் 2023 (பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்து அதில் பல்வேறு மாறுதல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டு மக்களுக்கு விரைவான நீதியை, நியாயத்தை உடனுக்குடன் நிலைநாட்டும் வகையில் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பில் பெயர் மாற்றம்மட்டுமின்றி பல்வேறு சீர்திருத்தங் களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக இதற்கு முன்பாக இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் தற்போது 358 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு புதிய சட்டங்களை அறிமுகம் செய்யும் முன்பாக நாட்டின் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பல்துறை வல்லுநர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் என பலதரப்பிலும் பலகட்ட ஆலோசனை நடத்தி அதன்பிறகே கொண்டு வந்துள்ளோம்.
ஆனால் இதையும் ஒரு சிலர் அதன் நோக்கம் புரியாமல் எதிர்த்துவருகின்றனர். நாட்டு மக்களின் விருப்பம் அறிந்து இந்திய குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய சீர்திருத்தங்களால் இன்னும் 5 ஆண்டுகளில் தலைசிறந்த சட்ட கட்டமைப்பை நாம் கொண்டிருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கருத்தரங்கில் நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தகவல்,ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3 சட்டங்களில் இடம்பெற்றுள்ள புதிய பிரிவுகள், மாற்றங்கள், முக்கிய சாராம்சங்கள், திருத்தங்கள் குறித்து கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆஷிஷ்ஜிதேந்திர தேசாய், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆரோதே ஆகியோர் விளக்கிப் பேசினர்.
முன்னதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக செயலாளர் ராஜிவ் மணி இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்தும், வரவேற்றும் பேசினார்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்கின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் அஞ்சு ரதிரானா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT