Published : 22 Jun 2024 11:06 PM
Last Updated : 22 Jun 2024 11:06 PM
புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு நாளை (ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று (சனிக்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை சார்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை இதனை தெரிவித்துள்ளது.
சில போட்டித் தேர்வுகளின் அறம் சார்ந்து எழுந்துள்ள குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வின் செயல்முறையின் தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்யும் நோக்கில் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு வருந்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT